மீண்டும் பிரச்சினையை தோற்றுவிக்க முயலாதீர்! வடக்கு எம்.பிக்களுக்கு மைத்திரி எச்சரிக்கை

“நாட்டில் மீண்டும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் வகையில் ஒரு சில கருத்துக்களைத் தூக்கிப் பிடிக்க வேண்டாம் என்று வடக்கு மாகாணத்திலுள்ள எம்.பிக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

“மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையை உருவாக்கி, அதற்கு அதிகாரப் பகிர்வு வழங்கினால் பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம். இது சம்பந்தமாக இந்தியாவுடன் நட்புறவு ரீதியில் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரக்கூடியதாக இருக்கும்.

அதிகாரப் பகிர்வு

வடக்குப் பிரச்சினை, மாகாண சபைத் தேர்தல், அதிகாரப் பகிர்வு மற்றும் காணி விடுவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் தற்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நான் ஜனாதிபதியாக இருந்தபோது, வடக்கில் மக்களுக்கு உரித்தான காணிகளில் 95 வீதத்துக்கும் மேல் விடுவித்தேன். தற்போது இரண்டு, மூன்று விகிதங்களே எஞ்சியுள்ளன.

மாகாண சபைகளுக்கான அதிகாரம், அதிகரிக்கப்பட வேண்டும் என்ற விடயம் பல வருடங்களாக வலியுறுத்தப்பட்டு வந்தாலும், அது நடைமுறைக்கு வரவில்லை. எம்மைப் பொறுத்தமட்டில், மாகாண சபை முறைமைக்கும் கீழ் சென்றதொரு அதிகாரப் பகிர்வு அவசியம்.

சகோதரத்துவத்துடன் செயற்படுவோம்

அதாவது மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை உருவாக்கப்பட வேண்டும். ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி சபை முறைமைக்கு மேலதிகமாக நிதி செலவளிக்க வேண்டியதில்லை.

தற்போது உள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுவை, மாவட்ட அபிவிருத்தி சபையாக இயங்க வைக்கலாம். இது சம்பந்தமாக இந்தியாவுடன் நட்புறவு ரீதியில் பேச்சு நடத்தலாம்.

பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம். சண்டையிடத் தேவையில்லை. இந்த நாட்டில் மீண்டும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் வகையில் ஒரு சில கருத்துக்களைத் தூக்கிப் பிடிக்க வேண்டாம் என வடக்கு மாகாணத்திலுள்ள எம்.பிக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். சகோதரத்துவத்துடன் செயற்படுவோம்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button