அபாய கட்டத்தை நோக்கி நகருமா இலங்கை பாடசாலைகள்?
இலங்கையில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாடு திறந்துவிடப்பட்டிருக்கின்றது. போக்குவரத்து இயல்பாக நடைபெற்றுக்கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. அரச துறை மட்டுமல்லாமல் தனியார் துறை நிறுவனங்களும் வழமை போன்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கடந்த முதலாம் திகதி தனியார் வகுப்புகளை நடத்த அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 21.10.2021 குறித்த சில பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. மேலும் வரும் 8ம் திகதி ஏனைய பாடசாலைகளையும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந் நிலையில் நேற்று முன்தினம் வவுனியாவின் பிரபல தேசிய பாடசாலை ஒன்றின் ஆரம்பப்பிரிவு ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இன்று (03.11.2021) வவுனியா வடக்கு வலயத்தை சேர்ந்த பாடசாலை ஒன்றில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பாடாசாலைகளுக்குள் கொரோனா தொற்று இனங்காணப்பட்டால் அது எந்த அளவு பாதிப்பை கொண்டு வரும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாடசாலைகளின் மாணவர்கள் கையாளுகின்ற பொருட்கள் அல்லது அவர்கள் பழகும் நிலை தொடர்பாக அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகின்றது.
பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பெற்றோரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்பது எமது VBC ஊடக வலையமைப்பின் குரலாய் இங்கு ஒலிக்கின்றது.