இஸ்லாம் பாடநூல்களை கல்வி அமைச்சு திரும்ப பெற்றதன் பின்னணி என்ன? முழுமையான காரணம் வெளியானது
இலங்கையின் பாடசாலைகளில் கற்பிக்கப்படும் 6,7.10 மற்றும் 11 ஆம் வகுப்புக்களுக்கான தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான இஸ்லாம் பாட நூல்கள் கல்வி அமைச்சினால் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தரங்களுக்கான பாடநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில கருத்துக்களை சீரமைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் இல்லம்பெரும தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த நடவடிக்கை, ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் கரிசனையின்பேரிலேயே மேற்கொள்ளப்பட்டதாக இன்றைய நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியை ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினர் ஒருவர் மறுத்துள்ளார்.
இந்த விடயம், தமது செயலணியில் பேசப்பட்ட விடயம் என்றபோதிலும், பாடநுால்களை திரும்பப்பெறவேண்டும் என்ற கோரிக்கை தமது செயலணியால் விடுக்கப்படவில்லை என்று ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடநுால்களில் இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாடுகளுக்கு முரணாக நடப்பவர்கள் “முர்தத்” என்ற அழைக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்று கருத்து கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஏற்கனவே இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு, கிழக்கில் உள்ள அமைப்பு ஒன்றின் தலைவர் ஒருவருக்கு எதிராக 30ஆண்டுகளுக்கு முன்னர் முர்தத் என்ற தீர்ப்பை வழங்கியிருந்தது.
இது நடைமுறையில் சாத்தியமற்றது என்றபோதிலும் பாடநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள“முர்தத்” என்ற விடயத்தை வாசிக்கும் மாணவர்கள், தொடர்ந்தும் தாம் தண்டனைக்குரியவர்கள் என்ற நிலைப்பாட்டில், தம்மை வைத்திருப்பார்கள் என்று, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவினால் தீ்ர்ப்பு வழங்கப்பட்ட கிழக்கின் குழு, நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களிடம் முறைப்பாட்டை செய்திருந்தது.
இதனையடுத்து குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களும் குறித்த பாடநுால்கள் விடயத்தில் பரிந்துரைகளை செய்திருந்தன.
இந்த தெரிவுக்குழுக்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக்கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் அங்கம் பெற்றிருந்ததாக ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் உறுப்பினர் எமது செய்திச்சேவையிடம் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையிலும் இது பதிவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.