ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 50 சதவீத வரி விதித்த ட்ரம்ப்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (European Union) அமெரிக்காவிற்கு (United States) இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் ஆடம்பரப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் ஒரு பதிவில், வர்த்தகத்தில் அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்படாத ஐபோன்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கவும் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்கும் அல்ல, அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.