குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை! அரசாங்கத்தின் அறிவிப்பு

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரியை நீக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறித்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி (Kumara Jayakody) நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லீற்றருக்கு விதிக்கப்பட்டுள்ள 50 ரூபா வரி நீக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சியின் போது திறைசேரிக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மொத்தமாக 884 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் அந்தக் கடனைத் தீர்க்கவே ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபா வரி அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடனின் அரைவாசி ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகையும் செலுத்தப்பட்டதும், எரிபொருளுக்கான 50 ரூபா வரியை நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button