ஜேர்மனி குடியுரிமை திட்டம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு!
ஜேர்மனியின் புதிய அரசாங்கம் மூன்றாண்டு குடியுரிமை திட்டத்தை ரத்து செய்ய அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஜேர்மனியின் புதிய கூட்டணி அரசு, நன்கு ஒருங்கிணைந்த புலம்பெயர்ந்தோருக்கான (well-integrated immigrants) மூன்று ஆண்டு விரைவான குடியுரிமை திட்டத்தை ரத்து செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
2023 ஜூனில் அறிமுகமான இந்த திட்டம், ஜேர்மனியில் மூன்று ஆண்டுகள் வசித்து, C1 நிலை ஜேர்மன் மொழித்திறன் மற்றும் சமூக ஒத்துழைப்பு (தன்னார்வ பணிகள், வேலை அல்லது கல்வி சாதனைகள்) காட்டும் புலம்பெயர்ந்த மக்களுக்கு குடியுரிமை அளிக்க அனுமதித்தது.
இது புலம்பெயர்ந்தோர் சமூகங்களில் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த திட்டம் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CSU) ஆகிய கட்சிகளால் “டர்போ குடியுரிமை” என விமர்சிக்கப்பட்டது.
இந்தநிலையில், மூன்று வருடங்கள் என்பது குடியுரிமைக்குப் போதுமான காலமல்ல என்றும் முழுமையான ஒருங்கிணைப்பு சந்தேகத்துக்குரியதாகும் என்றும் புதிய கூட்டணியின் கீழ் இந்த மூன்றாண்டு வழிமுறை நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த ஆண்டு கொண்டு வந்த பிற சீர்திருத்தங்கள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, B1 நிலை மொழித் திறனுடன் தொடர்ந்து ஐந்து வருடங்கள் வசித்த புலம்பெயந்தோர் குடியுரிமைக்குத் தகுதியானவர்களாக இருப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது முன்பு இருந்த எட்டு ஆண்டு தேவையை விட சிறந்த முன்னேற்றமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.