தொழிற்கல்வி குறித்து பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்றவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
கம்பஹா தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொனறில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தொழிற்கல்வித் துறையே எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக மாறப்போகின்றது. தொழில்சார் உலகிற்குத் தேவையான மனித வளம் கல்வி அமைச்சிலிருந்தே உருவாகிறது.
இருப்பினும், நம்மில் பலரும், அதே போன்று நமது நாடும் பல சந்தர்ப்பங்களில் நினைக்காத, கவனம் செலுத்தாத ஒரு முக்கிய பகுதியே இந்த தொழில்சார் உலகிற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்கும் இடமாகவே தொழிற்கல்வி இருந்து வருகின்றது.
எனினும், பாடசாலைப் படிப்பை முடித்து, பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியவில்லை என்றால் செல்லக்கூடிய ஒரு மாற்று இடமாகவே தற்போதும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது.
அல்லது மற்ற தேர்வுகள் அனைத்தையும் மேற்கொண்டு அவை கைகூடவில்லை என்றால் இறுதியில் வந்து விழும் இடமாகவே இது கருதப்பட்டு வருகின்றது. இது மிகவும் தவறானதாகும்.
தொழிற்கல்வியைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான, புத்திசாலித்தனமான, நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதொரு முடிவாகும்.
தொழிற்கல்வி கற்பதற்கு எடுக்கும் முடிவானது தற்செயலாக இருக்க முடியாது, அறியாமையினால் அல்லது இறுதி நேரத்தில் எடுக்கும் முடிவாகவும் இருக்க முடியாது.
அது தன்னுடைய திறன், தன்னுடைய விருப்பம், உலகத்தை பற்றி தான் கொண்டுள்ள கருத்துக்கள், இந்த எண்ணக்கருக்கள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கும் மிகவும் முக்கியமான முடிவாக அமைய வேண்டும்.
அதனாலேயே நாம் 2026 இல் நடைமுறைப்படுத்துவதென தீர்மானித்திருக்கும் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்குள் தொழிற்கல்விக்கு சிறப்பான இடத்தை ஒதுக்கி இருக்கின்றோம்.கல்விச் சீர்திருத்தம் என்பது சிறிய விடயம் அல்ல. அது பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அப்பாற்பட்ட பாரிய செயல்திட்டமாகும்.
பாடசாலைக் கல்வியின் மூலமே தொழிற்கல்வியை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அரசு எதிர்பார்க்கும் மறுமலர்ச்சி யுகத்திற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்க, அந்த மனித வளத்தை மேம்படுத்த நாம் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றோம். அதற்கமைய இந்த நாட்டின் தொழிற்கல்வியை உயரிய இடத்தில் நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.” என தெரிவித்தார்.