நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரேஒரு நிறுவனமும் இழுத்து மூடப்படும் அபாயம்!
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை இன்னும் மூன்று மாதங்களில் மூட நேரிடலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது இறக்கப்பட்டு வரும் எரிவாயு கப்பல் மூலம் மாத்திரம் நிறுவனத்திற்கு 200 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் வரும் கப்பல் மூலம் 200 மில்லியன் ரூபாவுக்கும் மேல் நஷ்டம் ஏற்படுவது நிச்சயம் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் கொழம்பஹெட்டிகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
12.5 கிலோ கிராம் ஒரு எரிவாயு கொள்கலனுக்கு 4462.25 ரூபாய் செலவிடப்படுவதுடன் அது தற்போது 2675 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக நஷ்டத்தை ஈடுசெய்ய 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் 2 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும்.
தொடர்ந்தும் நஷ்டத்தில் எரிவாயுவை விநியோகித்தால், அடுத்த மூன்று மாதங்களில் நிறுவனத்தை மூட நேரிடும். இதனால், நாட்டில் எஞ்சி இருக்கும் ஒரே ஒரு எரிவாயு நிறுவனத்தை பாதுகாக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழம்பஹெட்டிகே கூறியுள்ளார்.
லிட்ரோ நிறுவனம் 2021ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு மானிய விலையில் எரிவாயுவை வழங்கி வருவதன் காரணமாக 2021 ஆம் ஆண்டில் மாத்தரம் ஆயிரத்து 100 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நிறுவனத்தின் நிதி நிலைமை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் கொழம்பஹெட்டிகே தெரிவித்துள்ளார்.