பசில் ராஜபசவின் பாராளுமன்ற அந்தஸ்து செல்லுபடியற்றது – நீதிமன்றத்தை நாடிய தேரர்
கடந்த ஆடி மாதம் 8ம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக பசில் ராஜபக்ச அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்யப்பட்டதை தொடர்ந்து நாட்டின் நிதியமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.
அவர் பதவிப்பிரமாணம் செய்த காலத்திலேயே அவரது நியமனம் செல்லுபடியற்றது என ஆங்காங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் இப்போது பசில் ராஜபக்ச அவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை செல்லுபடியற்றது என உத்தரவிடக்கோரி உலப்பனே சுமங்கள தேரர் உட்பட மூன்று பேர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில் நிதியமைச்சர் பசில் ரோஹண ராஜபக்ச, பாராளுமன்ற செயலாளர் நாயகம், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டள்ளனர்.
இரட்டை பிரஜா உரிமை கொண்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை நாட்டின் சட்டத்துக்கு எதிரானது என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அரசாங்கத்துக்கு எதிராகவும், அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக அதிருப்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த விடயம் அரசின் மேல் மக்களுக்கு நம்பிக்கையின்மையை வெளிக்காட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.