வவுனியாவில் சில பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
டெங்கு அபாயத்தையடுத்து வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார பிரிவினரினால் டெங்கு பரவும் இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், டெங்கு பரவும் அபாயம் காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் வழங்கப்பட்டன.
வவுனியாவில் கடந்த இரு மாதங்களில் 20 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா, இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு பொதுச்சுகாதார பரிசோதகர் தலமையில் நகரின் சகாயாமாதாபுரம், சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அப்பகுதியிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்களின் திண்மக்கழிவுகள் நகரசபை வாகனத்தில் ஏற்றப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகள் பெருகும் நிலையில் காணப்பட்ட இடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.
இவ் நடவடிக்கையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள், நகரசபை சுகாதார ஊழியர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.