வவுனியாவுக்கு அவசியமாகும் வீதிச் சமிக்ஞைகள்
இலங்கையில் போக்குவரத்து நிலவரங்களை பொறுத்தவரை வாகன நெரிசல்கள் பாரிய அளவில் உருவாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் வவுனியாவிலும் வாகன நெரிசல் உருவாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக வவுனியா மணிக்கூட்டுக் கோபுரம், வைத்தியசாலை சுற்றுவட்டம், மாவட்ட செலயகத்துக்கு அருகாமை, குருமன்காடு சந்தி, வவுனியா பள்ளிவாசல் சந்தி போன்ற பல இடங்களில் போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழமையாகிவிட்டது.
அதிலும் பாடசாலை ஆரம்பிக்கும், முடிவடையும் நேரம் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் ஆரம்பிக்கும், முடிவடையும் நேரம் என்பன வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் நேரமாக கணிக்கப்படுகின்றது. எனவே வருங்காலங்களில் வவுனியா நகர்ப்பகுதிகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த வீதிச் சமிக்ஞைகள் தேவைப்படும் என கருத்து தெரிவிக்கப்படுகின்றது.
ஏனெனில் தற்போது போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் சில தமது வாகன சமிக்ஞைகளை இயக்காமலேயே போக்குவரத்தில் ஈடுபடுவதாக இன்று பழைய பேரூந்து தரிப்பிடத்துக்கு அருகாமையில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்திருந்தார். வாகனங்களை செலுத்துபவர்கள் தமக்கு முன்னும், பின்னும் வாகனங்கள் பயணிக்கின்றன என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும், குறிப்பாக பெண் பிள்ளைகள் பெரும்பாலும் இதனை அவதானிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். எனவே வீதிகளில் பயணிக்கும் எவரும் வீதிக் கட்டுப்பாடுகளையும், நடைமுறைகளையும் பின்பற்றும் போது விபத்துக்களை தவிர்க்க முடியும் என்று எமது VBC ஊடக வலையமைப்பு பரிந்துரை செய்கின்றது.