பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு புதிய பொறுப்பு
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கீழ், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப்பிரிவு, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப்பிரிவு என்பன தற்போது இணைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு, இதுவரை காலமும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் தனியாக இயங்கி வந்தது.
பொலிஸ் திணைக்களத்தின் வேறு எந்தவொரு பிரிவுடனும் குற்றப்புலனாய்வுப் பிரிவு இணைக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு இணைந்து செயற்படுவதற்கான சூழல் இதுவரை ஏற்படவும் இல்லை.
இந்நிலையிலேயே இவ்வாறு இரு பிரிவுகளும் பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப்பிரிவு, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைப்பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள், இனிவரும் காலங்களில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் இயங்க வேண்டியேற்பட்டுள்ளது.
இதற்கான பணிப்புரையை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுத்துள்ளார்.