இலங்கையில் கடலுக்கடியில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டம்
சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீட்டில்,இலங்கைக்கு எரிசக்தி பாதுகாப்பை வழங்கும் வகையில் கடலுக்கடியில் மின்கடத்தல் பணிகளை இரண்டு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வருவதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இலங்கையின் வட மத்திய நகரமான அனுராதபுரமும், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையும் இந்த திட்டத்தின் மூலம் இணைக்கப்படுகின்றன. இதன்படி இலங்கையின் 130 கிலோமீட்டர் நிலப்பரப்பு மின்சாரக்கடத்தலுக்கு பின்னர், மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரத்தில் இருந்து கடலுக்கடியில் ஒரு பாதை கேபிள் வழியாக இந்தியாவுடன் இணைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான 5ஆம் கட்ட முக்கிய சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் குறித்த சந்திப்பின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மின்சார இணைப்பு மற்றும் இலங்கையின் கிழக்கு திருகோணமலை மாவட்டத்தில் இந்தியாவினால் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய சக்தி திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவும் இலங்கையும் வடக்கு யாழ்ப்பாண குடாநாட்டின் நெடுந்தீவு, அனலத்தீவு மற்றும் நயினாதீவு தீவுகளுக்கு, கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் மார்ச் 1 ஆம் திகதியன்று கையெழுத்திட்டன.
இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த திட்டமானது, 530 கிலோவாட் காற்றாலை மின்சாரம், 1,700 கிலோவாட் சூரிய சக்தி, 2,400 கிலோவாட் மின்கலச் சக்தி மற்றும் 2,500 கிலோவாட் டீசல் மின்சாரத்தை குறித்த மூன்று தீவுகளுக்கும் வழங்கும் எனினும் இது இலங்கையின் தேசிய மின்சார இணைப்புடன் சேர்க்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.