புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு வழங்கப்படும் வாய்ப்பு!
புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (07.03.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சார நுகர்வோர் புதிய மின் இணைப்பு பெறும் போது அறவிடப்படும் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதற்கமைவாக மின் இணைப்பு கட்டணத்தில் 25% செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி முன்பு மின் இணைப்பை துண்டித்த பிறகு, மின்சாரத்தை மீள பெறுவதற்கான கட்டணம் 3,000 ரூபாயாக இருந்தது. அதை, 800 ரூபாயாக குறைக்க, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் மின் இணைப்பு சீரமைப்பின் போது செலுத்த முடியாத தொகையை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.