அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடி
அரச நிறுவனங்களில் பாரிய ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை காரணமாக அதிகாரிகள் தொடர்ந்தும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.
நாட்டின் பல அரச நிறுவனங்களில் பாரிய ஊழல், மோசடி, முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், கணக்காய்வுச் சட்டத்தை வலுப்படுத்துவதற்கு எதிரான அரச நிர்வாக அதிகாரிகளினால் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தொடர்ச்சியாக பதவிகளில் நீடித்துள்ளமையினால் சுகாதார அமைப்பின் நம்பகத்தன்மை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.