தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடத்தின் இரண்டாம் பாதியில் நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு ஆணைக்குழு தயாராகி வருவதாகவும் அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அத தெரண வினவிய போது தெரிவித்தார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையென்றால் கூடுதலான பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேவையான எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க ஆணைக்குழு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ள போதிலும், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில தரப்பினர், பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஜூன் மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் சிக்கல்கள் ஏற்படலாம் என காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.