சர்வதேச விமான நிலையமாக மாறவுள்ள ஹிங்குராங்கொட விமான நிலையம்
இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஹிங்குராங்கொட உள்நாட்டு விமான நிலையத்தை மறுசீரமைக்கும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில் ”RAF மின்னேரியா” என அழைக்கப்பட்ட இந்த விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்தின் ரோயல் விமானப்படைக்கு ஒரு மூலோபாய தளமாக செயற்பட்டது.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஹிங்குராங்கொடை விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக இரண்டு பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
விமான நிலைய அபிவிருத்தி பணியில் முதற்கட்டமாக ஓடுபாதையை நீடிப்பதில் கவனம் செலுத்தப்படும். தற்போது 2287 மீற்றர் நீளமும், 46 மீற்றர் அகலமும் கொண்ட இந்த ஓடுபாதை மொத்தம் 2500 மீற்றர் நீளத்திற்கு விரிவுபடுத்தப்படும்.
இதனை அபிவிருத்தி செய்வதால் விமான நிலையத்தில் பிரபலமான ஏர்பஸ் ஏ320 மற்றும் போயிங் பி737 வகை உட்பட பெரிய விமானங்கள் வருகை தர இடமளிக்கும். விரிவான நவீனமயமாக்கல் திட்டத்திற்கு மொத்தம் 17 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.