ஊழல் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்
“தேசிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை” செயற்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சர் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக கண்காணிப்பின் தொழில்நுட்ப உதவி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழலுக்கு எதிரான சட்ட, கட்டமைப்பு ரீதியான மற்றும் படிமுறை வரைவிற்கு அமைவாக குறித்த தேசிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான தேசிய நிகழ்ச்சி நிரல், 2023 இல் நிறைவேற்றப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், அதற்கான செயல்திட்டத்தைத் தயாரித்தல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செயல்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் செயல் திட்டத்திற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் இந்த யோசனைக்குள் உள்ளடங்கியுள்ளது.
2025-2029 காலப்பகுதிக்காக தேசிய ஊழல் எதிர்ப்பு திட்டத்தை உருவாக்குதல், கணக்காய்வாளர் நாயகத்தின் சட்ட அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்துதல், 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட விடயங்களும் இந்த நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.
வரி விலக்கு செய்யப்பட்ட நிறுவனங்களின் பெயர்களை பிரசித்தப்படுத்தல்,முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் முன்மொழிவுகளை மதிப்பிடுவதற்கான சரியான செயல்முறை உருவாக்கப்படும் வரை, மூலோபாய மேம்பாட்டுத் திட்டச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துதல், பயிற்சி பெற்ற மற்றும் சுயாதீனமான பணியாளர்களை கொண்டிருக்கும் வகையில் அரச நிறுவனங்களை மறுசீரமைப்புச் செய்தல், வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களுக்குள் தற்காலிகமாக ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்ட சாத்தியமான செயற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் நேரடி நிர்வாகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் சேமலாப நிதியத்திற்காக புதிய முகாமைத்துவக் கட்டமைப்பை நிறுவுதல், நிறைவேற்று மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் முறையை மேம்படுத்துவதன் மூலம் அரச உரித்துள்ள வங்கிகளுக்கிடையில் கூட்டுதாபன நிர்வாக கட்டமைப்பை உருவாக்குதல், நீதிச் சேவை ஆணைக்குழுவை பலப்படுத்தல் உள்ளிட்ட முன்மொழிவுகளும் இதற்குள் அடங்கியுள்ளன.
தேசிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல், தகவல் அறியும் உரிமையை வலுப்படுத்துவது தொடர்பான நியதிகளையும் உள்ளடக்கியுள்ளது.