பொதுத் தேர்தல் செலவுகள் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானம்
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராஜகிரியவில் உள்ள தேர்தல் செலகத்தில் நேற்று (28) பாராளுமன்ற தேர்தல் தொடர்பான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான இரு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதி மாவட்ட செயலாளர்களின் பங்குபற்றலுடன் முதலாவது கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இதில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கலந்துகொண்டார்.
இதேவேளை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி ஆணையர்கள், பிரதி தேர்தல்கள் ஆணையாளர்களுடன் தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தது.