பிரிக்ஸ் அமைப்பில் இணைய தீவிரமாக முயலும் இலங்கை

பிரிக்ஸ் பொருளாதாரக் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு இலங்கை தீவிரமாக முயன்று வருவதோடு இந்த விடயத்தில் ஆதரவு வழங்குமாறு இந்தியாவுக்கு முறையான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த வாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர்  ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

உலகளாவிய பொருளாதார நிலப்பரப்பிற்குள் தனது நிலையை வலுப்படுத்த இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த நடவடிக்கை குறிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

2024 அக்டோபர் 22 முதல் 24 வரை நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

2024ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் தலைவர் பதவியை ரஷ்யா வைத்திருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய தேர்தல் காலம் காரணமாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

உச்சிமாநாட்டில் இலங்கையின் பங்கேற்பு முக்கியமானது, ஆனால் பிரதிநிதித்துவங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் அமைப்பான பிரிக்ஸ் (BRICS), வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள செல்வந்த நாடுகளின் பொருளாதார மேலாதிக்கத்தை சவால் செய்யும் வகையில் நிறுவப்பட்டது.

அத்துடன், எகிப்து, ஈரான், எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய புதிய உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த பிரிக்ஸ் அமைப்பு அண்மையில் விரிவடைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button