அரசாங்க சொகுசுவாகனங்களின் விபரங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்

அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களின் விபரங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னதாக அரசாங்கத்தின் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அமைச்சுகள், அதிகார சபைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் காணப்படும் சொகுசு வாகனங்கள் தொடர்பான விபரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு பட்டியலிடப்படும் வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு திறைசேரியின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிருபம் திணைக்களத் தலைவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகளின் தலைவர்கள், அரச வங்கிகள் மற்றும் அரசுடைமை நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது எட்டப்பட்ட தீர்மானத்துக்கமைய, தங்களின் அதிகாரத்தின் கீழ் அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை விற்பனை செய்ய முடியும் எனவும் அரச நிறுவனத் தலைவர்களுக்கு திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

நிறுவனத்தின் வாகனத் தேவையை மதிப்பிட்டு, பயன்படுத்துவதற்கு சிக்கனமற்ற, நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு தேவையற்ற வாகனங்களை அரசாங்கத்தின் பெறுகை நடைமுறைகளைப் பின்பற்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் விற்பனை நடவடிக்கை தொடர்பான தகவல்கள் நிதியில்லாத ஆதன முகாமைத்துவ முறையில் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button