இலங்கையின் முக்கிய உட்கட்டமைப்புக்களில் தாமதங்கள்: பல பில்லியன்கள் நட்டம்
இலங்கை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கை, பல முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களில் பல குறிப்பிடத்தக்க தாமதங்கள் மற்றும் நிதி சிக்கல்களை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – தம்புல்ல பிரிவின் கட்டுமானம் 23.4 பில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டு, தற்போது அது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல், கட்டுமானத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாத போதிலும், கொழும்பு-இரத்னபுரி-பெல்மதுல்ல அதிவேக நெடுஞ்சாலைக்கு ஒதுக்கப்பட்ட 102.5 பில்லியனும், புதிய களனி பாலத்திலிருந்து அதுருகிரிய வரையிலான உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைக்கான 1.34 பில்லியனும் 2023ஆம் ஆண்டுக்குள் செலவிடப்பட்டுள்ளன.
கண்டி மல்டிமொடல் போக்குவரத்து முனையத் திட்டத்தில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட 825 பேருக்கு 720 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
கட்டுமானம் முடியும் வரை இழப்பீட்டுத் தொகைகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 1,000 பேருக்கு கூடுதலாக 200 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கண்டி திட்டம், 2021 மே 6ஆம் திகதியன்று, ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தாலும், கொள்முதல் செயல்பாட்டில் ஏற்பட்ட தாமதங்கள் சிவில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு கட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு ஒப்பந்ததாரருக்கு 2023 டிசம்பர் 31நிலவரப்படி 403 பில்லியன் ரூபாய் செலுத்தப்படவில்லை.
இது ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் அரசாங்கத்தினால் அபராதத்தை செலுத்த வழிவகுக்கும் என்று கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.