பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
சுதந்திரம்’ என்பது தேசத்தின் இறைமை மட்டுமன்று. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்காக அனைவருக்கும் உள்ள உரிமையை உறுதிப்படுத்துவதாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இனம், மதம், சாதி, பாலினம் அல்லது வர்க்கம் என்ற பேதமின்றி அனைத்து சமூகங்களும் இலங்கை (Srilanka) தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பதற்கு சமமான வாய்ப்புகள் கிடைக்கின்ற, அனைவருக்கும் உரிய மதிப்பும் பெறுமானமும் கிடைக்கின்ற ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே உண்மையான சுதந்திரம் சாத்தியமாகும் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ என்பது வெறுமனே ஒரு எண்ணக்கரு மட்டுமன்று. அது செயற்பாட்டுக்கான ஒரு அழைப்பு. அது ஆழமான ஜனநாயகம் மற்றும் பொருளாதார நீதிக்கு முன்னுரிமை அளிக்கும் எண்ணக்கருவாகும்.
விளிம்பு நிலை சமூகங்களின் குரல்கள் தன்னெழுச்சியாக வெளிப்படுவதில்லை.
அந்தக் குரல்கள் எழுகின்ற வகையில் தீர்மானங்களை மேற்கொள்வதில் அனைவரையும் பங்கேற்கச் செய்யும் ஒரு முறைமையுடன் இலங்கை தேசம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
அது அனைவருடையவும் உரிமைகள் பாதுகாக்கப்பட்ட மற்றும் பெறுமதியை உணரும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நாளில், நாம் அடையாளக் கொண்டாட்டங்களுக்கு அப்பால் சென்று ஒரு அர்த்தமுள்ள மாற்றத்திற்காக – உண்மையிலேயே அனைவருக்கும் உரித்தான இலங்கை தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.