மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான அறிவிப்பு

மின்சார கட்டணத்தில் ஜூன் மாதம் திருத்தம் செய்யப்படும் என இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வறட்சி நிலைமை மற்றும் எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தியின் அளவை பொறுத்து இத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில், நாட்டின் தற்போதைய விதிமுறைகளின் படி, மின்சார கட்டண மாற்றங்கள் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு காரணமாக கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி (Kumara Jayakody) அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், தற்போதைய வறட்சி காரணமாக நிலைமை கடினமாக இருப்பதாகவும் மே மாதத்தில் மழை பெய்யுமாயின் செலவுகள் குறையலாம் எனவும் தம்மிக விமலரத்ன (Dhammika Wimalaratna) தெரிவித்துள்ளார்.

தற்பொழுது எரிபொருளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தியின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, வருங்கால மின்சார கட்டண மாற்றங்கள் பற்றிய எந்த உத்தியோகபூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், இது வானிலை நிலைமைகளை பொறுத்தே அமையும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button