நிவாரண விலையில் உணவுப் பொதி வழங்கும் திட்டத்தில் சிக்கல்
இலங்கையில் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.
அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு உணவுப் பொதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட வரவு செலவு திட்டத்திற்கு அமைவாக, அஸ்வெசும நலன்புரி உதவிகளுக்காக புதிய விண்ணப்பங்களை சமர்ப்பித்த 812,753 விண்ணப்பதாரர்களில் தகுதியான பயனாளிகளுக்கு இந்த உணவுப் பொதி வழங்கப்பட இருந்தது.
5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொதியை 2,500 என்ற நிவாரண விலையில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
குறித்த நிவாரண விலையிலான உணவுப் பொதி வழங்கும் திட்டத்திற்கு சமீபத்தில் அமைச்சரவையில் அனுமதி கிடைத்தது.
அத்துடன் ஏப்ரல் 1 முதல் 13 வரையான காலப்பகுதியில் லங்கா சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.