டிஜிட்டல் மயமாகும் உயர் நீதிமன்றம்: குறையும் மக்களின் சிரமம்
முன்னர் பணமாக செலுத்தப்பட்ட பல உயர் நீதிமன்ற சேவை கட்டணங்களை தற்போது ‘GovPay’ மூலம் நிகழ்நிலையில் செலுத்துவதற்கான வாய்ப்பு மக்களுக்கு கிடைத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்க ‘GovPay’ வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
முதலாவதாக 16 முக்கிய அரசு நிறுவனங்களிலிருந்து அரச சேவைகளைப் பெறும்போது நிகழ்நிலையில் பணம் செலுத்துவதன் மூலம் இது ஆரம்பமானது.
www.govpay.lk என்ற வலைத்தளம் மூலம் பொதுமக்கள் அந்த சேவையைப் பெறுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
இந்த நிலையில், டிஜிட்டல் கட்டண முறை மூலம் ‘ஊழல்’ என்ற புற்றுநோயை சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்று தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி முர்து பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
‘GovPay’ டிஜிட்டல் கட்டண தளத்துடன் உயர் நீதிமன்றத்தை சேவைகளை இணைக்க இன்று (15) நடைபெற்ற நிகழ்வின் தலைமை நீதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, முன்னர் பணமாக செலுத்தப்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கட்டணங்கள், சான்றளிக்கப்பட்ட நகல் கட்டணங்கள், வணிக உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு தாக்கல் கட்டணம், இழப்பீடு, முறைப்பாடு தாக்கல் கட்டணம் மற்றும் பிரமாணப் பத்திரங்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட பல கட்டண பரிவர்த்தனைகளை GovPay மூலம் நிகழ்நிலையில் செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.