வாகன உதிரிப்பாகங்களின் விலை குறைக்கப்படுமாயின் பேரூந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியும்!
அரசாங்கத்தினால் வாகன உதிரிப்பாகங்களின் விலை 5 சதவீதத்தால் குறைக்கப்படுமாயின் பேரூந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியும் என பேரூந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறின்றி, டீசல் விலையைக் குறைப்பதனால் மாத்திரம் பேரூந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியாது எனப் பேரூந்து சங்கங்கள் குறிப்பிடுகின்றன.
02ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கனியவளக் கூட்டுத்தாபனம் ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பவற்றின் விலைகளைக் குறைத்துள்ளன.
இதன்படி, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, 405 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 355 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும் டீசல் கட்டணக் குறைப்பின் ஊடாக மாத்திரம் பேரூந்துக் கட்டணத்தைக் குறைக்க முடியாத நிலை உள்ளதாக அகில இலங்கை பேரூந்து சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
நூறு ரூபாவினால் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் 10 முதல் 15 ரூபாவினால் விலை குறைக்கப்படுகிறது. இந்த விலைக் குறைப்பு பேரூந்துக் கட்டணத்தில் எந்த தாக்கத்தையும் செலுத்தாது.
புதிய விலைத் திருத்தத்துக்கு அமைய குறுந்தூர பேரூந்துகளுக்கு நாளாந்தம் 750 ரூபாவை மீதப்படுத்த முடியும். நெடுந்தூர பேரூந்துகள் 100 லீற்றர் டீசலை பெற்றால் 1500 ரூபாவை மீதப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.