தேயிலை மற்றும் மரக்கறிகளுக்கு விசேட கலப்பு உரம் அறிமுகம்!
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் விவசாயத் தேவைகளுக்காக உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு கொமர்ஷல் பெர்டிலைசர் லிமிட்டெட் தேயிலை மற்றும் மரக்கறிகளுக்கு விசேட கலப்பு உரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு நேற்று விவசாய அமைச்சில் இடம்பெற்றது.
விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல் மற்றும் சோளப் பயிர்களுக்கு யூரியா மற்றும் எம்ஓபி உரங்கள் வழங்கப்பட்ட போதிலும் தேயிலை, மரக்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கைகளுக்கு உரம் வழங்கத் தவறியதாக விவசாயிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
எனவே, தேயிலை மற்றும் மரக்கறிகளுக்கு விசேட கலப்பு உரம் தயாரிக்கும் பணியைக் கொழும்பு கொமர்ஷல் பெர்டிலைசர் லிமிட்டெட்டிடமும் உருளைக்கிழங்குக்கான விசேட கலப்பு உரம் தயாரிக்கும் பணியை சிலோன் பெர்டிலைசர் கம்பனி லிமிட்டட் நிறுவனத்திடமும் ஒப்படைக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.
தேயிலை மற்றும் மரக்கறி உரம் 50 கிலோ கொண்ட ஒரு மூடை விவசாயிகளுக்கு ரூபா.3000க்கு கிடைக்கும். கொழும்பு கொமர்ஷல் பெர்டிலைசர் லிமிட்டெட், 200 மெட்ரிக் தொன் உரத்தை உற்பத்தி செய்துள்ளதுடன் 6000 மெட்ரிக் தொன் உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ளது.
இரசாயன உரங்கள் தடை செய்யப்பட்டதால் விவசாயத் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் உணவு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதன் போது தெரிவித்தார்.
இரசாயன உரம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததால் விவசாயிகள் வயல்களுக்குத் திரும்பினர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.