வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் நாளை முதல் அநுராதபுரம் வரை!
கொழும்பிலிருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் நாளை 05ஆம் திகதியுடன் அநுராதபுரம் வரையும் மட்டுப்படுத்தப்படவுள்ளது. பயணிகளின் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் 33 அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் வவுனியா அநுராதபுரம் வரையிலான புகையிரத பாதை திருத்தப்படவுள்ளதன் காரணமாக குறைந்தது 06 மாதங்களுக்கு இப் புகையிரத சேவை அநுராதபுரம் வரையும் மட்டுப்படுத்தப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்திலிருந்து செல்கின்ற “யாழ் ராணி” புகையிரதம் தற்பொழுது முறிகண்டி வரை பயணிக்கின்றது.
அந்த புகையிரதம் வவுனியா வரை செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியாவிலிருந்து அநுராதபுரத்திற்கு 20 பேரூந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் இதன்மூலம் வவுனியாவிலிருந்து பயணிகள் அனுராதபுரம் சென்று அனுராதபுரத்திலிருந்து புகையிரதத்தில் கொழும்பு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.