குறைந்த வயதில் பல சாதனைகளை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்!
ஷுப்மன் கில் இல்லாத இந்திய அணியை நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவுக்குத் தொடர்ந்து சதங்கள் அடித்து சாதனை படைத்து வருகிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3 வது டி20 ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2 – 1 எனக் கைப்பற்றியது இந்தியா. 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 126 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார் ஷுப்மன் கில்.
டி20 கிரிக்கெட்டில் தனிநபராக அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். 2023 தொடங்கிய 1 மாதம் 1 நாளில் 3 சதங்களும் ஒரு இரட்டைச் சதமும் எடுத்துள்ளார்.
23 வயதான ஷுப்மன் கில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் :
* யு19 உலகக் கிண்ணத்தை வென்றுள்ளார். (2018 இல்)
* 2021 இல் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார். (பிரிஸ்பேனில் 2 வது இன்னிங்ஸில் 91 ஓட்டங்கள் எடுத்தார்.)
* ஐபிஎல் போட்டியை வென்றுள்ளார். (2022 இல் குஜராத் அணி ஐபிஎல் கிண்ணத்தை வென்றது.
ஷுப்மன் கில், 16 ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 483 ஓட்டங்கள் எடுத்தார்.)
* டி20 கிரிக்கெட்டில் தனிநபராக அதிக ஓட்டங்கள். (இதற்கு முன்பு விராட் கோலி 122 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதை நேற்று முறியடித்தார் கில்.)
* யு-19 உலகக் கிண்ணம், டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் சதமடித்துள்ளார்.
* ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம்.
* டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் – கோலி, ரோஹித் சர்மா, ராகுல், ரெய்னா, ஷுப்மன் கில்.
* ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஓட்டங்கள், டெஸ்ட், டி20யில் 100 ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்கள் – ரோஹித் சர்மா, ஷுப்மன் கில்.