அழிவுகரமான அபாயங்களுடன் கூடிய நில நடுக்கங்கள் இலங்கையில் ஏற்படுமா..!
இலங்கையில் கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பதிவான நில அதிர்வுகள் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசார் பொறியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் உதேனி பண்டார அமரசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், வெல்லவாய, புத்தல போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் சில நில அதிர்வுகளை உணர்ந்துள்ளனர் என்பது உண்மைதான்.
இது துருக்கியில் ஏற்பட்டது போன்ற நிலநடுக்கத்தை ஏற்படுத்துமா? என்ற தேவையற்ற அச்சம் ஏற்படக்கூடும். எங்கள் நிலப்பரப்பு மிகவும் நிலையானது. இருப்பினும், இலங்கை தீவு இந்து – அவுஸ்திரேலிய டெக்டோனிக் தட்டின் மையத்தில் அமைந்துள்ளது.
டெக்டோனிக் தட்டில் பிளவுகள் இல்லாததால் எமது நிலப்பரப்பில் நில நடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக்குறைவு.
நாட்டில் பதிவான சிறிய நில அதிர்வுகள் தொடர்பில் பொதுமக்கள் அநாவசியமாக அச்சமடைய தேவையில்லை.
இந்த நாட்டில் நில அமைப்புக்கு அமைய, அழிவுகரமான அபாயங்களுடன் கூடிய நில நடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்துள்ளார்.