மோசமான ஆட்சியாளர்களைப் பாதுகாக்கும் அரசாங்கமே தற்போது உள்ளது: ரிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

மக்களைக் கையேந்தும் நிலைக்குக் கொண்டு வந்த மோசமான ஆட்சியாளர்களைப் பாதுகாக்கும் அரசாங்கம் தான் தற்போதும் உள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (22.02.2023) வவுனியா நகரசபை மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடக்குமா… நடக்காதா… என்ற கேள்வி இருந்தாலும், தான் இந்த தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று சொல்லுகின்ற ஒருவராகவும், இந்தத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் ஒருவராகவும் சஜித் பிரேமதாச தேர்தல் கூட்டங்களை நடத்தி வருகின்றார்.

ஜனநாயக நாட்டில் ஜனநாயக தேர்தலைப் பிற்போட வேண்டாம். தேர்தலை முகம் கொடுக்க மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கொடுக்கின்ற வகையில் இந்தப் பிரசாரக் கூட்டங்கள் அமைந்திருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளின் நிலை பரிதாபமாகவுள்ளது. விவசாயிகளும், கூலி வேலை செய்பவர்களும் இங்கு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு மோசமான அரசாங்கத்தை இந்த நாட்டு மக்கள் கொண்டு வந்தார்கள்.

அந்த அரசாங்கம் மிக மோசமான முறையில் ஆட்சி செய்தார்கள். இனவாதத்தைக் கக்கினார்கள். மதவாதத்தைக் கக்கினார்கள். இனங்களுக்கிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்தார்கள். மதங்களுக்கு இடையில் பிரச்சினையை உண்டாக்கினார்கள்.

அதனூடாக இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கி, இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தி இந்த நாட்டு மக்களைப் பிச்சைக்காரராக்கிக் கையேந்துபவர்களாக மாற்றி, இந்த அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாத நிலையை உருவாக்கி மூன்று நேரம் சாப்பிட முடியாத மோசமான நிலையை இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கிச் சென்றார்கள். அந்த ஆட்சியாளர்களைப் பாதுகாக்கும் அரசாங்கம் தான் இன்று இருந்து கொண்டிருக்கின்றது.

மோசமான ஆட்சியாளர்களைப் பாதுகாக்கும் அரசாங்கமே தற்போது உள்ளது: ரிசாட் குற்றச்சாட்டு | A Government That Protects Bad Rulers

திரை மறையில் அவர்களை வைத்துக் கொண்டு இந்த அரசாங்கம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றது. அவர்கள் செய்த எந்தக் குற்றங்களுக்கும் தண்டனையும் இல்லை. இந்த நாட்டை நாசப்படுத்தியதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. திரை மறைவிலிருந்து இந்த ஆட்சியைக் கொண்டு நடத்துகிறார்கள்.

இன்னும் இன்னும் நாட்டை நாசப்படுத்துவதற்கான சதிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, வவுனியா மாவட்ட மக்கள் எதிர்காலத்தில் புத்தியாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக ஒன்றுபட்டுச் செயற்படுவதன் மூலம் இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

1977ஆம் ஆண்டு இந்த நாட்டில் அதிக உழுந்து உற்பத்தியை வழங்கியது வவுனியா மாவட்டம். ஆனால், வனவளத் திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும் எமது விவசாயிகளின் நிலங்களைத் தனதாக்கிக் கொண்டதனால் இன்று விவசாயம் செய்ய முடியாத நிலையுள்ளது. விவசாயிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

யூரியா இல்லாத பிரச்சினை. விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சரியான சந்தை வாய்ப்பு இல்லாத பிரச்சினை. இவ்வாறு நீண்டு செல்லும் விவசாயிகளின் பிரச்சினையை யாரும் கண்டுக்கொண்வதில்லை. அவர்களுக்கான உரிய தீர்வை வழங்குகிறார்கள் இல்லை. சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது கட்டிய வீடுகள் அரைகுறையாக இருக்கின்றது. இன்று 3 வருடமாகியும் அதற்கு எந்தத் தீர்வும் இல்லை.

5 இலட்சம் ரூபா முடிந்த வீட்டைத் தற்போது கட்டி முடிக்க 25 இலட்சம் தேவையாகவுள்ளது. சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்தால் அந்த வீடுகளுக்கான முழுமையான பணத்தை வழங்கி வீடுகளை முடிக்க வேண்டும் எனக் கேட்டிருக்கின்றேன்.

விவசாயிகளின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு அவர்களின் வாழ்த்தைத் தரத்தை உயர்த்த உதவ வேண்டும் எனக் கோரியுள்ளோம். அத்துடன், மல்வத்து ஓயாத் திட்டம், கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள், பொருளாதார மேம்பாட்டிற்கான வேலைவாய்ப்புக்கள் என்பவற்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம். நிச்சயமாக அவர் அதனைச் செய்வார். எனவே ஐக்கிய மக்கள் சக்தியை நாம் வெல்ல வைப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button