ஐ.நாவில் இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழு அறிக்கை மீளாய்வு!
ஐ.நா மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை குறித்த விடயம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
கடந்தகால உடன்படிக்கைகளை இலங்கை எவ்வாறு நடைமுறைப்படுத்தியுள்ளது என்ற விடயம் இங்கு முக்கிய ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில், அங்கு தாம் முன்வைக்கவுள்ள விடயங்களை சிறிலங்கா தரப்பு தயார்படுத்தி வருகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மார்ச் 24 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் ஏனைய ஐந்து நாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் இந்த அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் உரையாற்றுவார்.
இதன் பின்னர் இடம்பெறும் கூட்டங்களில் சிறிலங்கா உட்பட்ட ஐந்து நாடுகளுக்குரிய மீளாய்வு அமர்வு இடம்பெறும் என ஐ.நா மனித உரிமைப்பேரவை அறிவித்துள்ளது.
18 சுயாதீன சர்வதேச நிபுணர்கள் குழுவின் வழக்கமான மீளாய்வுகளின் ஒரு பகுதியாக, ஆறு நாடுகளை மீளாய்வு செய்யும் வகையில் அமர்வு நடத்தப்படவுள்ளது.
மக்களின் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு உள்ளூரில் நடைமுறைப்படுத்துகின்றது என்பது தொடர்பான சர்வதேச வல்லுநர்கள் குழு வழங்கிய அறிக்கையிடல் தொடர்பான இந்த மீளாய்வு மார்ச் 8 ஆந் திகதி மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எகிப்து, துர்க்மெனிஸ்தான், சாம்பியா, பெரு, சிறிலங்கா மற்றும் பனாமா ஆகிய 06 நாடுகளும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 173 உறுப்பினர்களில் உள்ளடங்குகின்றன.
குறித்த நாடுகள், தாம் முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை எவ்வாறு நடைமுறைப்படுத்துகின்றது என்ற விடயம் 18 சுயாதீன சர்வதேச வல்லுநர்கள் குழுவின் மதிப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இலங்கை சர்வதேச உடன்படிக்கைளை தாண்டி கண்துடைப்பு பொறிமுறைகளை ஒவ்வொரு அமர்வுகளின் போதும் காண்பித்துவரும். இந்த முறையும் அது தொடர்பான ஆயத்தப்படுத்தல்களை செய்துவருவதாக கூறப்படுகிறது.
எனினும் அந்தந்த நாடுகளின் அறிக்கைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ள சமர்ப்பிப்புகளை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொது உரையாடல்களின் மூலம் விவாதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.