ஊழியர்கள் நியமனம் – வடக்கு மாகாண சபை விசனம்!
வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்கு தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் கோரிக்கை கடிதம் வடக்கு மாகாணத்திலிருந்து அனுப்பப்படவுள்ளது.
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்ட பின்னர், ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்தத் திட்டத்துக்கு வடக்கு மாகாணத்திலிருந்து அதிகளவானோர் தெரிவு செய்யப்பட்டிருக்கவேண்டிய நிலையில், அப்போதைய ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையீட்டால் குறைந்தளவானோரே தெரிவாகியிருந்தனர்.
இவர்களில் 100 பேர் வரையில் தற்போது வடக்கு மாகாணசபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், வடக்கு மாகாண சபையில் சிற்றூழியர், தகைசார் பணியாளர் உட்பட சுமார் ஆயிரத்து 200 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இந்த வெற்றிடங்களுக்கு, ஏனைய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களிலிருந்து ஆயிரத்து 100 பேரை நியமிக்குமாறு வடக்கு மாகாணசபையால் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் பெருமளவானோர் வேலைவாய்ப்பின்றியுள்ள நிலையில், தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை இங்கு நியமிக்க முயற்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.