இலங்கைக்கான ஐ.எம்.எப் உதவி தொடர்பில் முக்கிய செய்தி!
இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அத்தியாவசியமானது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார நிலையை மேலும் மோசமடையச் செய்யும் தரப்பினர் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை பெற்றுக் கொள்வது தொடர்பில் பல செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதனை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை பெற்றுக் கொள்ள முடியாதென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், இது பொய்யான செய்தி எனவும் இலங்கைக்கான நிதி உதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இந்த மாதத்தின் மூன்றாவது வாரம் சாதகமான பதிலை வழங்கும் எனவும் ரஞ்சித் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வதற்கான இறுதிக்கட்ட கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறிலங்காவின் முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்சவின் முயற்சியை தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமாக முன்னெடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.