27 வயதான இளம் பெண் படுகொலை: சந்தேகநபர் அடையாளம்!

27 வயதான இளம் பெண் படுகொலை: சந்தேகநபரை காட்டிக்கொடுத்த "ஏகல்" | 27 Year Old Young Woman Was Murdered

கண்டி அலவத்துகொட பகுதியில் அண்மையில் திருமணமான 27 வயதான இளம் பெண்ணொருவர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கண்டுப்பிடிப்பதற்கு ‘ஏகல்’ என்ற மோப்பநாய் உதவி புரிந்துள்ளதாக அஸ்கிரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக, களத்தில் இறக்கப்பட்ட மோப்பநாயான “ஏகல்” வழங்கிய துப்பின் மூலமே சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை மோப்பநாயான ‘ஏகல்’ மலைகளை கடந்து நான்கு கிலோ மீற்றர் மிகவும் கடுமையான பயணத்தை மேற்கொண்டு, சந்தேக நபரின் வீட்டுக்குள் நுழைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கண்டி, அஸ்கிரிய காவல்துறை மோப்ப நாய் பிரிவின் காவல்துறை கான்ஸ்ட பிள் பீ.ஜி. ஜயரத்ன என்பவரால் மோப்பநாய் வழிநடத்தப்பட்டது. அப்பிரிவின் உப-காவல்துறை பரிசோதகர் சந்திரவங்ச பெரேரா, அங்கு கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றினர்.

இத்தேடுதலின் போது தான் முகங்கொடுத்த விபரத்தை வெளியிட்ட ஜயரத்ன,

பெண்ணின் சடலம், வயலில் சேற்றுக்குள் அமுல்த்தப்பட்டு, அதன்மேல் நாற்றுகள் நாட்டப்பட்டுள்ளமை முதலில் கண்டறியப்பட்டது. களத்தில் இறக்கப்பட்ட மோப்ப நாய் இரண்டு நாற்றுகளை பிடுங்கி எடுத்த பின் என்னையும் இழுத்துக்கொண்டு வயலுக்குள் சென்று, வயலில் இருந்து மேலேறியது.

பின்னர் தேயிலைத்தோட்டத்துக்குள் புகுந்த “ஏகல்” என்னையும் இழுத்துக்கொண்டே மேடுகளில் ஏறி, பள்ளங்களில் இறங்கி சுமார் நான்கு கிலோமீற்றருக்கு அப்பால் சென்று வீடொன்றுக்கு முன்பாக நின்றுக்கொண்டது.

அந்த வீட்டுக்கு முன்பாக நின்றிருந்த நபரொருவரை கடந்து சென்ற “ஏகல்” அந்த வீட்டை ஒரேயொருமுறை சுற்றி வந்து வீட்டுக்குள் புகுந்து கொண்டது.

வீட்டுக்குள் புகுந்துக்கொண்ட “ஏகல்”, என்னையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓர் அறைக்குள் சென்று, அங்கிருந்த கட்டிலை முகர்ந்து கொண்டே அதன் கீழே அமர்ந்துக்கொண்டது.

அதன்பின்னரே, அவ் வீட்டில் இருந்த இராணுவ சிப்பாய், சந்தேகத்தின் பேரில் அலவத்துக்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

காவல்துறை மோப்ப நாயான “ஏகல்” இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பல குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான துப்பை துலங்கியுள்ளதாக கண்டி அஸ்கிரிய காவல்துறை மோப்பநாய் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button