தேர்தல் நிச்சயம் இல்லை: அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பு!

நிச்சயம் இல்லை: அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பு! | Political Circles

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடப்பது நிச்சயமில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பொருத்தமான திகதி ஏப்ரல் 25 என்று தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்தது.

இருந்த போதிலும் அதற்கு நிதி வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சு இன்னும் பச்சைக் கொடி காட்டாததால் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கான நிதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு பல தடவைகள் நிதி அமைச்சிடம் கேட்டுவிட்டது. எந்தப் பதிலும் இல்லை.

நிதி அமைச்சர் என்ற வகையில், இந்த நிதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பணமில்லை என்று கூறி வரும் ஜனாதிபதி இந்த நிதியைக் கொடுப்பது சந்தேகமே. இதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது.

மேலும், இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதியன்று நடத்தப்படும் என்பதற்கு சாத்தியப்பாடுகள் குறைவு என்று தேர்தல்கள் கண்காணிப்பு மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பான பெஃபரெல் இந்த எதிர்வை வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் இந்த விடயத்தில் நீதிமன்ற முடிவுகளை கூட புறக்கணிப்பது வருந்தத்தக்கது என்று அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹான ஹெட்டியாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் மக்களின் உரிமையை பறிக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எனினும் நீதிமன்ற முடிவுகளைக் கூட புறக்கணிக்கும் நிலைமைக்கு அரசாங்கம் வந்துள்ளது.

இதன் காரணமாக நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிடையே சமநிலை இப்போது முழுமையான குழப்பத்தில் உள்ளது என்று ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம், சதி செய்து வருவதாகவும், நாடாளுமன்ற வரப்பிரசாதத்துக்கு பின்னால் மறைந்திருந்து, நீதிமன்ற தீர்ப்பை சவால் செய்வதன் மூலம் தேர்தல்களை தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பான பெஃபரெல் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button