கடல் போல் திரண்ட ரசிகர்கள்! – உலக கோப்பை அணிகளுக்குள் நுழைந்த நேபாளம்
நேபாளம் – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான துடுப்பாட்ட போட்டியைக் காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டதால் மைதானமே திருவிழா கோலம் பூண்டது.
50 ஓவர் உலகக் கோப்பை துடுப்பாட்ட போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் இடம்பெறுகிறது. இந்த தொடருக்கு இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிக்கு முன்னேற உள்ள அணிகளுக்கு தகுதிகாண் போட்டிகள் நடந்து வருகிறது.
அந்த வகையில், நேபாளம் கிர்திபூர் திரிபுவன் பல்கலைக்கழக சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நேபாளம் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.
இப்போட்டியில் நாணயசுழட்சியில் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் துப்புப்பெடுத்தாடி செய்து, 6 ஆட்டமிழப்பிற்கு 310 ஓட்டங்களை குவித்தது. ஐக்கிய அரபு அமீரகம் அணியில் அதிகபட்சமாக, சதம் விளாசிய ஆசிப் கான் 101 ஓட்டங்களும், அரைசதம் விளாசிய அரவிந்த் 94 ஓட்டங்களும், முஹம்மது வசீம் 64 ஓட்டங்களும் எடுத்தனர்.
நேபாளம் அணி தரப்பில் அதிகபட்சமாக தீபேந்திர சிங் 2 ஆட்டமிழப்புகளை வீழ்த்தினார்.
311 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணிக்கு dls முறைக்கு அமைவாக 261 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
குறித்த இலக்கை விட நேபாளம் அணி 9 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்ததால் அணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது.
இதன் மூலம் இவ்வருடம் நடைபெறவுள்ள 50 ஓவர் உலக கோப்பை தொடரில் விளையாட நேபாளம் அணி தகுதி பெற்றது.
இந்நிலையில், நேபாளம் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை போட்டியை காண 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கிர்திபூர் திரிபுவன் பல்கலைக்கழக மைதானத்தில் குவிந்தனர்.
மைதானத்தின் மொத்த கொள்ளவு 30 ஆயிரம் ஆகும். இதனால், அனுமதிசீட்டு கிடைக்காமல் தவித்த மற்ற ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே இருந்த மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர்.
இப்போட்டியை காண குவிந்த ரசிகர்கள் எடுத்த புகைப்படங்களும், காணொளிகளும் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.