தபால் மூல வாக்களிப்பு குறித்த தினங்களில் நடத்தப்படாது: உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு குறித்த தினங்களில் நடத்தப்படாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை நேற்றைய தினம் (20.03.2023) தேர்தல் ஆணைக்குழு அனைத்து மாவட்டங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகளை இம்மாதம் 28, 29, 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
ஆனால், திறை சேரியில் இருந்து பணம் செலுத்தாததால், நேற்று (20ம் தேதி) மாலை வரை, தபால் வாக்குகளை, தேர்தல் ஆணையத்திடம், அரசாங்க அச்சகம் வழங்கவில்லை.
இதன் காரணமாகத் தபால் மூல வாக்குச் சீட்டுகள் இன்று (21ஆம் திகதி) மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் தபால் நிலையத்தில் கையளிக்கப்படவிருந்த போதிலும், அதற்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் தேர்தல் அதிகாரிகளுக்குக் கிடைக்கவில்லை.
17 மாவட்டங்கள் தொடர்பான தபால் வாக்குச்சீட்டுகளின் அச்சிடும் பணியை அரச அச்சகம் நிறைவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் திறை சேரியில் இருந்து அச்சிடலுக்கான கட்டணம் கிடைக்கும் வரை, அவற்றில் எந்தவொரு வாக்குச் சீட்டுகளும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்படமாட்டாது என்று அரச அச்சகத்தின் பணிப்பாளர் நாயகம் கங்காணி லியனகே உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தொடர்ந்தும் பிற்படப்படலாம் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.