மகிந்த – பஸிலுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத் தடை முற்றாக நீக்கப்பட்டது!

மகிந்த – பஸிலுக்கு எதிரான வெளிநாட்டுப் பயணத் தடை முற்றாக நீக்கப்பட்டது! | Foreign Travel Ban Against Mahinda Basil Lifted

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

குறித்த வெளிநாட்டுப் பயணத் தடை இனி அமுலில் இல்லை என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு தற்போது எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீது விசாரணைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மனுவின் பிரதிவாதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோர் சார்பில் அதிபர் சட்டத்தரணி நவீன் மாரப்பன நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

அத்தோடு, கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதிக்குப் பின்னர் தமது தரப்பினருக்கு வழங்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் நீடிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

இதை குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு அதிபர் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை வைத்திருந்தார்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பிரதிவாதிகள் இருவருக்கும் விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை முற்றாக நீக்கி, குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கும் தெரிவிக்குமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button