பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவில் 6.6 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்திலிருந்து சுமார் 184 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், மக்களுக்கு உதவ அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு பேரிடர் நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய 1,000 கிமீ பரப்பளவில் நில நடுக்கம் உணரப்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
யூரேசிய மற்றும் இந்திய டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பில் இருப்பதால் இந்தப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.