புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
மே மாத நடுப்பகுதிக்குள் சுமார் 33,000 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22.3.2023) உரையாற்றிய அமைச்சர், அண்மையில் பல்கலைக்கழக பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
7,500 தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்கள்
“மேலும், சுமார் 7,500 தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்திலிருந்து தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இறுதி முடிவுகள் மார்ச் 31ம் திகதி வெளியிடப்படும்” என்றார்.
இதன்படி மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை குறைப்பதற்காக தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்களை உரிய மாகாண சபைகள் ஊடாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேசிய பாடசாலைகளுக்கான நியமனங்கள் கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
“பெரும்பாலும், 7,500 தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர்கள் ஏப்ரல் இறுதிக்குள் உரிய நியமனங்களைப் பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.
26,000 பல்கலைக்கழக பட்டதாரிகள்
மேலும், 26,000 பல்கலைக்கழக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்கான பரீட்சை அனுமதிகள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை (மார்ச் 25) நடைபெறும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த வலியுறுத்தியுள்ளார்.
53,000 பட்டதாரிகள் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். “தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். முடிவுகள் மாகாணங்களுக்கு ஒப்படைக்கப்படும்,” என்றார்.
இதன்மூலம், கட்டமைப்பு நேர்முகத்தேர்வுகளை அடுத்து அவர்கள் மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
“(இந்த இரண்டு முறைகளிலிருந்து) கிட்டத்தட்ட 33,000 ஆசிரியர்களை மே மாதத்தின் நடுப்பகுதிக்குள் நியமிக்க முடியும்” என்று அவர் கூறினார்.
மேலும், ‘விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை கணக்கிட்டு, ஆட்சேர்ப்பின் பின்னரும் உயர்தரத்திற்கான ஆசிரியர் பற்றாக்குறையை கணக்கிடும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிய பட்டதாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.