முக்கிய அரச திணைக்களங்களை நவீனப்படுத்த திட்டம்.

3 முக்கிய அரச திணைக்களங்களை நவீனப்படுத்த திட்டம் | Project To Modernize Department Of Meteorology

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை உலக வங்கியின் உதவியுடன் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சேவைகள் பொருளாதார அம்சங்களின் பல துறைகளில் வலுவான தாக்கத்தைக் கொண்டுள்ளதுடன் இந்த துறைக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.

அனர்த்தங்களை எதிர்கொள்ளும் போது மற்றும் தணிக்கும் போது மேற்படி திணைக்களத்தின் முன்னறிவிப்பு இன்றியமையாதது, எனவே உலக வங்கியின் நிதியுதவியுடன் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி போன்ற நிறுவனங்களை நவீனமயமாக்குவதற்காக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

‘தலைமுறைகளை தாண்டிய வானிலை, காலநிலை மற்றும் நீரின் எதிர்காலம்’ என்பது 2023 ஆம் ஆண்டுக்கான உலக வானிலை தினத்தின் நினைவு விழாவின் கருப்பொருளாக அமைந்துள்ளது.

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர், மேம்பட்ட தரவுகளின் அடிப்படையில் புதுப்பித்த வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதற்கு புதிய தொழில்நுட்பத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இது விவசாயம், மின்சாரம், மீன்பிடி, சுற்றுலா போன்ற பிற துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் அதன் பங்களிப்புகள் நிதி அடிப்படையில் அளவிட முடியாதவை எனவும் குறிப்பிட்டார்.

மாறிவரும் காலநிலை மற்றும் புவியியல் சூழலில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வேகமாக வளர்ந்து வரும் உயரமான மற்றும் உயர் குடியிருக்கும் கட்டிடங்களின் தரப்படுத்தல் மற்றும் கடுமையான கட்டிடத் தரங்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இதன்போது எடுத்துரைத்தார்.

1950 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் திகதி உலக வளிமண்டலவியல் நிறுவனம் நிறுவப்பட்ட உடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 ஆம் திகதி உலக வளிமண்டலவியல் தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button