அரச நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் காரணமாக எதிர்காலத்தில் சுமார் 400 அரச நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சில புதிய வரிகளும் அறிமுகப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ள 133 அரச மற்றும் சட்டரீதியான நிறுவனங்களை எதிர்காலத்தில் இலாபகரமானதாக மாற்றும் வகையில் அவற்றை மறுசீரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
இதனால், இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை உயர்த்தி, விரைவான வளர்ச்சியை உருவாக்கும் நடவடிக்கையாக, பல ஆண்டுகளாக பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக இருந்த இந்த நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்டங்கள் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உட்பட இலங்கை கேட்டரிங் நிறுவனம், ஸ்ரீலங்கா டெலிகொம், ஸ்ரீலங்கா காப்புறுதி நிறவனம், கென்வில் ஹோல்டிங்ஸ் (தனியார்) நிறுவனம், ஹில்டன் ஹோட்டல் கொழும்பு, லிட்ரோ நிறுவனம் உட்பட லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், லங்கா ஹாஸ்பிடல் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அரசாங்கத்திற்குச் சொந்தமான பங்குகளின் உரிமையை தனியாருக்கு மாற்றுவதற்கு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.