வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பகலுணவிற்காக 19.1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – கல்வி அமைச்சர்
இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் 11 இலட்சம் மாணவர்களுக்குப் பகலுணவு வழங்குவதற்கு 19.1 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர,; இப்பகலுணவுத் திட்டத்திற்காக குறிப்பாக 200இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும், நாடு பூராகவும் உள்ள 7800 பாடசாலைகளுக்கு பகலுணவு வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. இதற்கான சிபாரிசை நிதி ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதற்கான நிதி திறைசேரியிலிருந்து மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக அந்தந்த மாகாண சபைகளுக்கு வழங்கப்படும்.
இது வரை மார்ச் 31ஆம் திகதி வரைக்குமான நிதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மீதித் தொகையையும் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெளிவுபடுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள 43இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு பாரிய பிரச்சினையாகும். மாணவர்களின் மூளை, அறிவு வளர்ச்சிக்கும் சுகாதாரத்திற்கும் அத்தியவசியமான போஷாக்கு மிகுந்த பகலுணவு வழங்கும் திட்டம் பல வருடங்கள் நடைமுறைப்பட்டிருந்தது. அறிக்கைகளின் பிரகாரம் போஷாக்கு மிக்க மாணவர் பரம்பரையை உருவாக்க உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டிலுள்ள சகல மாணவர்களுக்கும் வழங்கும் இப்பகலுணவுத் திட்டத்தை எப்போது ஆரம்பிப்பது என்று எதிர்க் கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இதுவரை காலமும் 41 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மேலும் சுட்டிக்காட்டினார்.