சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் விவகாரம்: காத்திருக்கும் இலங்கை அரசாங்கம்
சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான வழக்குகளின் முடிவுக்காக இலங்கை அரசாங்கம் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தற்போது நீதிமன்ற வழக்குகளே தடையாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
வழக்கு முடிந்ததும், சம்பந்தப்பட்ட சீன நிறுவனங்கள் இந்த திட்டத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பயிர்களை நாசம் செய்யும் 100,000 குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என முன்னதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் இலங்கையில் மட்டுமே உயிர்வாழும் டோக் மக்காக் குரங்குகள், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அவை இலங்கையில் பாதுகாக்கப்பட்ட இனமாக கருதப்படவில்லை. இதன் காரணமாக அரசாங்கத்தின் திட்டத்தை விலங்கு உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர்.
அவர்கள், இந்த குரங்குகள், சீன உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்பப்படவுள்ளன என்ற கூற்றை நம்பாத நிலையில் இவை ஆய்வகங்களில் சோதனைக்கு பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை இலங்கையில் சுமார் 30 இலட்சம் டோக் மக்காக் குரங்குகள் இருப்பதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.