நாட்டில் கடுமையாக்கப்படும் சட்டம்: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தகவல்
இந்து சமுத்திரத்தின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத மனிதக் குடிபெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் முன்னெடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இந்நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்த நிவாரணங்களை வழங்குவதில் தற்போதுள்ள சுற்றறிக்கைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் கவனம் செலுத்தி வருகின்றன.
நமது பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பில் கடற்படை பொறுப்புடன் பாரிய பங்களிப்பை ஆற்றி வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும், எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கையொன்றைப் தயாரிக்கப்படுறது.
இதன்போது பயங்கரவாதம், தீவிரவாதம், சட்டவிரோத நடவடிக்கைகள், புவிசார் அரசியல் குற்றங்கள் ஆகியவை தொடர்பில் இந்த மதிப்பீட்டில் உள்ளடக்கப்படுகின்றன.
இந்த மதிப்பீட்டின் படியே, ஒரு நாடாக நாட்டின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தீர்மானங்கள் எடுக்கும்போது இந்த மதிப்பீடுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
முக்கியமாக, சட்டத்தின் ஆட்சி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதில் தாக்கம் செலுத்துகிறது. எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாத எந்த நாட்டிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தார்.