முஸ்லிம் விவாகரத்து சட்ட முன்மொழிவுகள் நிராகரிப்பு!
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட, முஸ்லிம் விவாகரத்து சட்ட (MMDA) முன்மொழிவுகள் 150 க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள கல்விமான்கள், தொழில் வல்லுநர்கள், சமூகத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், ஊடகப் பிரமுகர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்ட இலங்கை முஸ்லிம்கள் இதனை நிராகரித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் முன் மொழிவுகளில், இஸ்லாமிய சட்டத்தை வழிநடத்தும் நீதி, இரக்கம் மற்றும் அமைதி ஆகிய இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் குறிப்பிடப்படவில்லை என்று குறித்த 150 பேரும் குறிப்பிடுகின்றனர்.
“இந்த ஆவணத்தில் கையொப்பமிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட பின்தங்கிய நிலைப்பாடுகளால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். இந்த நிலைப்பாடுகள் ஷரீ ஆவில் பொதிந்துள்ள இரக்கம் மற்றும் அமைதி ஆகிய கொள்கைகளுக்கு எதிரானது.
இலங்கை அரசியலமைப்பை நிலைநிறுத்தும் இந்த முன்மொழிவுகள், இஸ்லாத்தின் அறிவொளி சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முஸ்லிம் அடையாளத்துக்கு எதிரானது என்று 150 பேரும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னோக்கிச் செல்லும் சீர்திருத்தங்களில் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதன் மூலம் சமூகத்திற்கு உண்மையான தலைமைத்துவத்தை காட்டுமாறு, குறித்த அறிக்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்துகிறது.
அத்துடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை நிராகரிக்குமாறும், முஸ்லிம் விவாகரத்து சட்டத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் நீதி அமைச்சர் மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் 150 பேரும் வலியுறுத்தியுள்ளனர்.