வெளிநாடு செல்வோரின் குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்

வெளிநாடு செல்வோரின் குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்: வெளியான அறிவிப்பு | Sri Lanka Foreign Employment Bureau Job Vacancies

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு செல்வோரின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ஒன்றை வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் (06.09.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊடாகவே நாட்டிற்கு அதிக வருமானம் கிடைக்கின்றது. இலங்கை மத்திய வங்கி 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிக்கையின் படி 2022ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட 1610 மில்லியன் டொலர் வருமானத்திற்கு மேலதிகமாக 2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 2823 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அது 75 சதவீத வளர்ச்சியாகும். இவ்வருடத்தின் இறுதியில் 6500 மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதோடு, ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இலக்கான 7000 மில்லியன் டொலர் வருடாந்த வெளிநாட்டு வருமானம் என்ற இலக்கை இவ்வருட இறுதிக்குள் அடைந்துவிட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேபோல் இவ்வருட இறுதிக்குள் நியூசிலாந்து, சிங்கப்பூர், மோல்டா இராச்சியம், துருக்கி, லக்சம்பர்க், சைப்பிரஸ், பிலிப்பைன்ஸ், ருமேனியா, மலேசியா, மாலைத்தீவு, லெபனன், குவைட், ஹோமான், கட்டார், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கைசாத்திடப்படவுள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் இத்தாலிக்கு மேற்கொண்டிருந்த சுற்றுப் பயணத்தின் போது அந்நாட்டு தொழில் மற்றும் சமூக கொள்கை பிரதி அமைச்சர் மாரிய தெரேசா மெல்ஸ் அவர்களை சந்திக்க முடிந்தது.

அதன்போது, இத்தாலி வேலைவாய்ப்புக்காக செல்வோருக்கு 6 மாதகால அடிப்படை தொழில் பயிற்சியை வழங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

அதற்கு மேலதிகமாக ஆறு மாத கால செயன்முறை பயிற்சிக் காலத்தையும் ஒரு வருட பயிற்சிக் காலத்தையும் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அது தொடர்பில் ஆராய்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.

மறுமுனையில் மலேசியாவின் பாதுகாப்பு பணிகளுக்கான முன்னோடித் திட்டமாக 10 ஆயிரம் இலங்கையர்களை இணைத்துக் கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதோடு அதனை எதிர்காலத்தில் 1 இலட்சமாக அதிகரித்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம்.

அதேபோல் 1985 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அமைச்சரவை அனுமதி தற்போது கிடைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பிலான குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான சட்டத்தை மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன், வெளிநாட்டு முகவர் நிலையங்களுக்கான அனுமதி வழங்கும் பொறிமுறையை சீரான முறையில் முன்னெடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்குச் செல்வோரின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் ஒன்றை வழங்கும் திட்டம் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான வலுவூட்டல் திட்டங்கள் ஆகியவற்றையும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்தோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பிலான தேசிய கொள்கை ஒன்றைத் தயாரிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டங்களை யாழ்ப்பாணத்திலும் முன்னெடுத்துள்ளோம். மேலும், 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றுள்ளதோடு, அவர்களில் 74 சதவீதமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button