சனல் 4 ஆவணப்பட விவகாரம்: நாடாளுமன்றில் விசேட விவாதம்
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பான முழு நாள் சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 19 ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை ஆட்களைப் பதிவு செய்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2 ஆயிரத்து 334/ 47 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
பின்னர், பி.ப 5.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 20 ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை காடு பேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான முழுநாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.